×

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆபத்தான அரசு பள்ளி கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு அதிகாரிகள் தகவல்

வேலூர், செப்.17:வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அரசு பள்ளி கட்டிடங்களை கல்வி அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், உயர்நிலை கல்வித்துறையின் கீழ் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலும், மேல்நிலைக்கல்வியில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகள் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலான அரசு பள்ளி கட்டிடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது.இதற்கு முன் இவ்வாறு ஏற்பட்ட விபத்துக்களால் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டுகளில் பெய்த வடகிழக்கு பருவ மழையின்போது இந்த பள்ளிகள் பெருமளவு சேதமடைந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் இடியும் நிலையில் இருந்த கட்டிடங்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை கணக்கெடுத்து, அவற்றை சீரமைக்க தேவையான நிதி குறித்து அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் படித்து வரும் மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் நிதியுதவி பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் மூன்றில் ஒருபங்கு பள்ளிகள் சேதமடைந்த கட்டிடங்களாக உள்ளது. எப்போது வேண்டுமானலும் இடியும் நிலையில் உள்ளது. இதனை கணக்கெடுக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டிடங்கள் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இடிக்க வேண்டும். இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : state school buildings ,
× RELATED சாயல்குடி அருகே பைப்லைன் உடைந்து...