இனிமேல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது

* தூய்மை இந்தியா இயக்கத்தின் மத்திய இணை செயலாளர் பேச்சு

Advertising
Advertising

வேலூர், செப்.15: இனி அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என்று தூய்மை இந்தியா இயக்கத்தின் மத்திய இணை செயலாளர் வி.கே.ஜிண்டால் கூறினார். வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அனைத்து அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள மாநகராட்சி வரிவசூல் மையத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

நகர்நல அலுவலர் மணிவண்ணன், ஸ்மார்ட் சிட்டி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1வது மண்டல உதவி ஆணையாளர் மதிவாணன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தூய்மை இந்தியா திட்ட இயக்க மத்திய அரசின் இணை செயலாளர் வி.கே.ஜிண்டால் கலந்துகொண்டு பேசியதாவது: மனிதனால் மட்டுமே குப்பைகள் உருவாக்கப்படுகிறது. மிருகங்கள் குப்பைகளை உருவாக்காது. மனிதன் ஓரிடத்தில் 2 நிமிடம் இருந்தால் 5 கிராம் குப்பைகளை உருவாக்குகிறான். எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றாலும் மனிதர்கள் குப்பைகள் உருவாக்குகின்றனர். குப்பைகள் இல்லாமல் மனிதனால் வாழமுடியாது.

இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அறிவித்த ‘ஸ்வச் பாரத்’ திட்டம் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே தூய்மை பணியில் வேலூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. தூய்மை மாநகராட்சியாக திகழ்கிறது. அதாவது, குப்பைகள் தரம்பிரித்து அதில் காய்கறிகள் மற்றும் வீணான உணவுகளை கொண்டு எரு தயாரிக்கப்படுகிறது. நான் இங்கு வரும் வழியில் பார்த்தேன். மிகவும் தூய்மையாக நகரம் காட்சி அளிக்கிறது. தற்போது மக்கள் தூய்மை பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர்.

அதேபோல் குப்பைகளையும் வெளி இடத்தில் கொட்டுவதை தவிர்க்கின்றனர். இந்த மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் நல்ல விஷயங்களை நான் மற்ற மாநிலங்களில் கொண்டு சொல்கிறேன். நீங்களும் பல மாநிலங்களுக்கு சென்று அங்கு சிறப்பாக செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொண்டு இங்கு செயல்படுத்தலாம். இங்குள்ள மேஜை மீது பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வைத்து உள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் நீங்களும் பயன்படுத்தாதீர்கள். இனிமேல் கூட்டங்களிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கொண்டு வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் குறித்தும், குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பாகவும், தூய்மை பணிகள் குறித்தும் தங்களது நிறை குறைகள் குறித்து பேசினர்.

Related Stories: