வேலூர் மாவட்டத்தில் 11 நீதிமன்றங்களில் நடந்த ₹9.40 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

வேலூர், செப்.15: வேலூர் மாவட்டத்தில் 11 நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ₹9 கோடியே 40 லட்சத்து 93ஆயிரத்து 801 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நேற்று நடந்தது. வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும்(பொறுப்பு) வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட குடும்பநல நீதிபதி லதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் மாவட்ட நீதிபதியுமான குணசேகர், மாவட்ட கூடுதல் தொழிலாளர் நீதிபதி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி எம்.நந்தன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.மனோகரன், சமூக சேவகர் குமரகுரு முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கேசவன் வரவேற்றார். மாவட்டம் முழுவதும் உள்ள 11 நீதிமன்றங்களில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, காசோலை மோசடி, மோட்டர் வாகன விபத்து வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்கு என மொத்தம் 11 ஆயிரத்து 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1,797 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ₹9 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 801 இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: