×

மாணவர் காவல் படை செயல்பாடுகள் குறித்து டிஐஜி ஆய்வு திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில்

திருவண்ணாமலை, செப்.15: திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டுள்ள மாணவர் காவல் படையின் செயல்பாடுகள் குறித்து டிஐஜி சத்தியபிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தமிழக பள்ளிகளில் என்சிசி., என்எஸ்எஸ்., சாரண-சாரணியர் இயக்கம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக பள்ளிகளில் மாணவர் காவல்படை என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மாணவர் காவல்படை பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துவங்கப்பட்டுள்ள மாணவர் காவல் படையின் செயல்பாடுகள் மற்றும் இதில் சேகரிக்கப்படும் தகவல்களின் ஆவணங்கள் பராமரிப்பு குறித்து சென்னை அசோக்நகர் காவல் பயிற்சி கல்லூரி டிஐஜி சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன்படி திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டுள்ள மாணவர் காவல் படையின் செயல்பாடுகள் குறித்தும், இதுகுறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், இது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை பார்வையிட்டார்.

மேலும், இந்த மாணவர் காவல் படையின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர் மற்றும் போலீசாருக்கு விளக்கினார். மேலும், பள்ளி தலைமை ஆசிரியையிடம், மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், மாணவர் காவல் படை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன், மாணவர் காவல் படையினருக்கு அளிக்க வேண்டிய பயிற்சி, அவர்களுக்கான பாடதிட்டம், எவ்வாறு ஆவணங்களை பாதுகாப்பது என்பது குறித்து டிஜஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, டிஐஜி சத்தியபிரியா பேசுகையில், `மாணவர் காவல் படை கேரள மாநிலத்தில் துவங்கப்பட்டது. அங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து தற்போது, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 1,117 அரசு பள்ளிகளில் மாணவர் காவல் படை துவங்கப்பட்டுள்ளது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 198 பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மாணவர் காவல் படை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். இதில், ஏடிஎஸ்பி வனிதா, மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம், இன்ஸ்பெக்டர் கவிதா, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvannamalai Municipal Girls School ,
× RELATED திருவண்ணாமலை நகராட்சி பெண்கள்...