×

நெல்லை பேட்டை வீரபாகுநகரில் பராமரிப்பின்றி பொலிவிழந்த பூங்கா இருமாதமாக பூட்டிக்கிடக்கும் அவலம் சீரமைத்து விரைவில் திறக்கப்படுமா?

பேட்டை, செப். 15: பேட்டை வீரபாகுநகரில் பராமரிப்பின்றி பொலிவிழந்த பூங்கா, கடந்த இருமாதங்களாக பூட்டிக்கிடக்கிறது. விரைவில் சீரமைத்து திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.  நெல்லை அடுத்த பேட்டை தொழிற்சாலை, கல்விக்கூடங்கள், வணிக வளாகம் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளதால் இங்கு நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு நகர உள்கட்டமைப்பு நிதி சேவை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் பேட்டை பகுதி ரயில்நகர், விஸ்வநாத நகர், சாஸ்திரி நகர், வீரபாகு நகர், ஆசிரியர் காலனி, காந்தி நகர், கோடீஸ்வரன் நகர் போன்ற பகுதிகளில் சிறியவர்கள் முதல் ெபரியவர்கள் வரை பொழுதை போக்கிட பசுமை சூழலுடன் நடை பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு கருவிகள், விலங்குகள் சிலைகள், ஊஞ்சல்கள், சருக்குதல் என கண்கவர் சிறப்பம்சத்துடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 தினமும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் பேட்டை வீரபாகு நகர் பூங்கா மழலைகள், குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் குதூகலத்துடன் காணப்பட்டது. மக்கள் நல அமைப்பின் மூலம் காவலாளி நியமிக்கப்பட்டு பூங்காவில் மூலிகை மரங்கள், பூச்செடிகள், புல்வெளிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கப்பட்டது.  தற்போது சொட்டு நீர் பைப் சேதமடைந்ததாலும், வால்வுகள் திருடு போனதாலும் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி மரக்கன்றுகள், செடிகள் கருகிவருகின்றன.

பூங்காவிற்கு வரும் சமூகவிரோதிகள் அங்குள்ள காவலாளியுடன் தகராறில் ஈடுபடுவதுடன், பெண்களை கேலி கிண்டல் செய்வது, விலங்குகளின் பொம்மைகளை உடைத்து சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பூங்காவில் கண்காணிப்பு கேமரா அமைத்து இதை தடுக்க வேண்டும்.  மேலும் முறையான பராமரிப்பின்றி இப்பூங்கா தற்போது களை இழந்து வருவதாக  பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக மக்கள் நல அமைப்பின் பராமரிப்பில் இருந்த பூங்காவின் சாவி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பூங்கா பூட்டியே கிடக்கும் அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.குப்பை வண்டி நிலையமாக மாறும் அவலம்: வீரபாகுநகர் பூங்கா தற்போது செயல்படாததால் மாநகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டிகளை நிறுத்தி பூங்காவை குப்பை வண்டி நிலையமாக மாற்றி வருகின்றனர். வண்டிகளை பூங்காவில் நிறுத்துவதும், சார்ஜ் செய்வதும் நடைமுறையில் உள்ளதென பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : park ,Veerabhagunagar ,
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்