×

மேலப்பாளையத்தில் தவாக பொதுக்கூட்டம் தமிழக வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தினருக்கு தாரை வேல்முருகன் சாடல்

நெல்லை, செப். 15: தமிழக மக்களின் வேலை வாய்ப்புகள் பிற மாநிலத்தினருக்கு தாரை வார்க்கப்படுவதாக  மேலப்பாளையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த  எழுச்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் சாடினார்.  மேலப்பாளையம் பஜார் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் எழுச்சி பொதுக்கூட்டம் ஊடகப் பிரிவு மாநில துணைச்செயலாளர் உமர் தலைமையில் நடந்தது.
இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் பேசுகையில், ‘‘தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படும் நிலையில் தமிழக வேலைவாய்ப்புகள் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தி மொழி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

 தெற்கு ரயில்வே, வருமான வரித்துறை,  சுங்கத்துறை, தபால் துறை, சேலம் இரும்பு உருக்காலை, திருச்சி ரயில் பெட்டி  கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு இந்தி மொழி பேசுபவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழக மின்வாரியம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில்  இந்தி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு உடந்தையாக செயல்படும் மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ஆதரவளித்து வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதை கண்டித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம், ரயில்வே அலுவலகம் மற்றும் உள்ளிட்ட மத்திய அரசுகளின் அலுவலகங்களை நாங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.   முஸ்லிம்களை நசுக்க வேண்டும் என்பதற்காககவே மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியால் அவதிப்படுகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலை மாற வேண்டும். மத்திய அரசு தனது நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்’’ என்றார்.  கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அலிம் அல்புகாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : states ,Thalai Velumurugan Sadal ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்