பேனர் தொழிலை முறைப்படுத்த வேண்டும்

தூத்துக்குடி, செப். 15: தூத்துக்குடியில் எஸ்டிஆர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒரே நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்தியை கட்டாயமாக்குவது என்பது மக்களின் விருப்பமாக ஒருபோதும் இருக்க முடியாது. தாய் மொழி தமிழ், பயிற்று மொழி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக விருப்பமிருந்தால் எந்த மொழியையும் படிக்கலாம் என்பதுதான் தமாகாவின் நிலைப்பாடு.தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்கின்றனர். நகரம், மாநகர பகுதிகளில் பிரதான சாலைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேனர் வைக்க அனுமதிக்ககூடாது. எனவே, மக்களை பாதிக்காத வகையில் அதை அரசு அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு தேவை என்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முறைப்படுத்த வேண்டும்.

Advertising
Advertising

அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவில் பொருளாதார தேக்கநிலையை சரிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் பிரச்னை உயிர் பிரச்னையாக மாறி வருகிறது. எனவே காவிரியை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் பிரசார பயணத்தை வரவேற்கிறோம், என்றார். பேட்டியின்போது தமாகா நிர்வாகிகள் யுவராஜா, எஸ்டிஆர்.விஜயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: