கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மற்றொரு சம்பவத்தில் 7 பவுன் நகை மாயம்

திருச்சி, செப். 15: திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி உஷா(52). கணவன், மனைவி இருவரும் நேற்றுமுன்தினம் மதியம் பைக்கில் சென்றனர். கோரையாறு பாலம் அருகே சென்றபோது, பின்னால் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் உஷா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து உஷா எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல சென்னை மாங்குடி ஏசிடிஏ கார்டனை சேர்ந்தவர் சந்திரமோகன்(43). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது தந்தை வீடு திருச்சி எ.புதூர் காந்தி நகரில் உள்ளது. உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சந்திரமோகன் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். இதில் சந்திரமோகனின் மனைவி தனது 7 பவுன் நகையை மாமனார் வீட்டிலேயே வைத்துவிட்டு திருமணத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகையை காணவில்லை. இது குறித்து சந்திரமோகன் எ.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : incident ,
× RELATED மரத்தில் வேன் மோதி பெண் பலி