×

பாசன வாய்க்கால் தூர்வாரியும் தண்ணீர் செல்லவில்லை வெண்ணாற்றில் உயரமான தடுப்பணை கட்ட வேண்டும்

நீடாமங்கலம்,செப்.15: நீடாமங்கலம் அருகில் பழைய நீடாமங்கலம் பாசன வாய்க்கால் 15 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரியும் பாசனத்திற்கு தண்ணீர் செல்லாததால் வெண்ணாற்றில் உயரமான தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சுண்ணாம்புகார தெரு அருகில் வெண்ணாற்றிலிருந்து பழைய நீடாமங்கலத்திற்கு பாசன வாய்க்கால் செல்கிறது.இந்த பாசன வாய்க்காலில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாசன வசதி பெற்று பயன் பெற்று வந்தது.வெண்ணாற்றில் அதிக அளவு மணல் திருடியதால் ஆறு கீழும்,பாசன வாய்க்கால் மேலும் சென்று விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணி துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெண்ணாற்றில் பாப்பையன் தோப்பு என்ற இடத்தில் தடுப்பணை ஒன்று கட்டினர்.இந்த தடுப்பணை கட்டியும் பாசனத்திற்கு தண்ணீர் செல்லாததால் அங்குள்ள சிறு குறு விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த நிலங்களை நிலத்தடி நீரை பயன்படுத்தி மின்மோட்டாரால் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் அடகு வைத்தும் சிலர் நிலங்களை விற்று விட்டனர்.தற்போது நீலத்தடி நீரை மட்டும் பயன் படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சிலர் நிலங்களை பிளாட் போட்டு விற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு முன் இந்த பாசன வாய்க்கால் பழைய நீடாமங்கலம் அருகில் தூர் வாரப்பட்டது.அப்போது பழைய நீடாமங்கலம் விவசாயிகள் தலப்பு வாய்க்காலிலிருந்து தூர் வார வேண்டும் என தூர் வாரிய பொக்லைன் இயந்திரத்தை மறைத்து விட்டனர்.அதன் பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் தலப்பு வாய்க்காலிலிருந்து தூர் வாரப்பட்டது.15 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்று நீரை மீண்டும் பயன்படுத்தி விவசாயம் செய்ய உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பழையநீடாமங்கலம் பாசன வாய்க்காலில் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆனால் ஆறு பாசன வாய்க்கால் கீழ் சென்றதால் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதி குடியிருப்பு கழிவு நீர் பாசன வாய்க்கால் வழியாக ஆற்றில் கலக்கிறது.எனவே வெண்ணாற்றில் பாப்பையன் தோப்பு அருகில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை உயர்த்தி கட்டி பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த வாய்க்காலிலிருந்து நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக தெப்பகுளத்திற்கு செல்லும் வாய்க்காலும் தூர்ந்துள்ளதால் 15 ஆண்டுகளாக சந்தான ராமசுவாமி கோயில் தெப்பகுளத்திற்கு தண்ணீர் செல்லாமல் குளத்தை சுற்றி நாணல் புல் பூண்டுகள் மண்டி அசுத்தமான நீராக நோய் பரவும் நிலையில் உள்ளது.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து