×

புதுக்கோட்டை மாவட்டத்தில் லோக் அதாலத் 1111 வழக்குகளுக்கு ரூ.3.81 கோடியில் தீர்வு

புதுக்கோட்டை, செப்.15: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1111 வழக்குகளுக்கு ரூ.3.81 கோடியில் உடனடி தீர்வு காணப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, இலுப்பூர் ஆகிய நீதிமன்றங்களில் சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலத்தில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தொடக்கி வைத்து விசாரணை மேற்கொண்டார். இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலெட்சுமி, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி மகாலெட்சுமி, நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் அறிவு, முனிக்குமார், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 5 ஆயிரத்து 267 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 3 ஆயிரத்து 110 வழக்குகளில், 225 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 629க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 157 வழக்குகளில் 886 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 66 ஆயிரத்து 528க்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1111 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 157-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ்மாரியப்பன், முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Lok Adalat ,Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...