×

நாகை அக்கரைகுளம் அண்ணா நகரில் 2 மாதமாக சாலையில் ஓடும் கழிவுநீர் அதிகாரிகள் அலட்சியம்

நாகை,செப்.15: நாகை அக்கரைகுளம் அண்ணா நகரில் கடந்த 2 மாத காலமாக சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அக்கரைகுளம் அண்ணா நகர் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் தினந்தோறும் பிழைப்பு நடத்தும் சாதாரண மக்களாக உள்ளனர். இப்பகுதியில் பெரும்பாலும் அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளது. நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த அண்ணா நகரில் கடந்த 2 மாத காலமாக சாலையில் கழிவுநீர் பொங்கி பெருக்கெடுத்து ஓடுகிறது.

இவ்வாறு சாலையில் ஓடும் கழிவுநீர் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து வசிக்க முடியாத அவலம் உள்ளது. பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இரவு பகலாக பாதாள சாக்கடை கழிவுநீர் இப்படி பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் சாலையில் பொங்கி வழிந்தோடும் கழிவுநீரை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewerage officials ,road ,city ,Ankara ,Nagai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி