வேலை வாங்கித்தருவதாக பணம் மோசடி வாலிபரை தாக்கிய வேளாண் அதிகாரி கைது

காடையாம்பட்டி, செப்.15: சேலம் அருகே வாலிபரை தாக்கிய வேளாண்மைத் துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கோபாலகிருண்ணன்(27). எம்எஸ்சி பட்டதாரியான இவரது நண்பர் மணிவண்ணன். சேலம் அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் இவர் மூலம், காடையாம்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர், கோபாலகிருஷ்ணனிடம் வேளாண்மைத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய கோபாலகிருஷ்ணன், ₹13 லட்சம் பணத்தை கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், கோவிந்தராஜ் காலம் கடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை காடையாம்பட்டி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்ற கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜை சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். பணம் தர முடியாது என கோவிந்தராஜ் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கட்டையால் சரமாரி தாக்கியதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும், அவர் வேறு யாரிடமாவது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: