போக்குவரத்து விதி மீறல் சேலம் சரகத்தில் ஒரே நாளில் 6195 பேருக்கு அபராதம்

சேலம், செப்.15:தமிழகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்கும் விதமாக, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களின் லைசென்சை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் உயர்  அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 அதன்படி, நேற்று முன்தினம் 4 மாவட்டங்களிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில், போக்குவரத்து விதிமுறையை மீறியதாக சேலம் மாவட்டத்தில் 882 பேருக்கும், நாமக்கல்லில் 234 பேருக்கும், தர்மபுரியில் 1053 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4007 பேருக்கும் என மொத்தம் 6,195 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: