அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி

தர்மபுரி, செப்.15: தர்மபுரியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விரைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, விரைவு சைக்கிள் போட்டி நாளை (15ம்தேதி) காலை 7 மணிக்கு நடக்கிறது. தர்மபுரி- பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளது.

போட்டியில் 01.01.2007க்கு பின் பிறந்தவர்கள் 13 வயது பிரிவிலும், 01.01.2005க்கு பிறந்தவர்கள் 15 வயது பிரிவிலும், 01.01.2003க்கு பின் பிறந்தவர்கள் 17 வயது பிரிவிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து  தனித்தனியே நுழைவு விண்ணப்பம் பெற்றுவர வேண்டும். 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கிமீ தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கிமீ தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 20 கிமீ தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 15 கிமீ தூரமும் சைக்கிள் ஓட்டவேண்டும். போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு  பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும், முதல் 10 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் உறுதிமொழி கொடுப்பதுடன் சொந்த சைக்கிளுடன் வரவேண்டும். இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சைக்கிளை மட்டுமே போட்டிக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Anna ,Birthday Quick Bicycle Competition ,
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்தை...