×

எருதாட்டத்தில் பரிசுகளை குவித்த மல்லிகேஸ்வரர் கோயில் காளை இறந்தது

தர்மபுரி, செப்.15: தர்மபுரி அருகே மிட்டாநூல அள்ளி மல்லிகேஸ்வரர் கோயில் காளை, எருதாட்டத்தில் பல்வேறு பரிசுகளை குவித்துள்ளது. இந்நிலையில் திடீரென உயிரிழந்தை காளையை, கிராம மக்கள் கூடி தாரை தப்பட்டை முழங்க எடுத்துச்சென்று நேற்று நல்லடக்கம் செய்தனர். தர்மபுரி  மாவட்டம் மிட்டாநூல அள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மல்லிகேஸ்வரர்  சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான காளை ஒன்று, கடந்த  12 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது.  காளையை கோயில் நிர்வாகத்தினரே  பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கோயில் காளையின் உடல்நிலை  பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று  முன்தினம் உயிரிழந்தது. இதையடுத்து காளையின் உடலை அடக்கம் செய்ய  கிராம  மக்கள் ஒன்றிணைந்து தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக சென்று, ஊருக்கு  வெளியே நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை  நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள்  கூறுகையில்,  மல்லிகேஸ்வரர் கோயில் காளை எருதாட்டம் நடக்கும் இடங்களில்  பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளது. இந்த  காளைக்கு இப்பகுதி மக்கள் அனைவருமே உணவளிப்பது வழக்கம். காளை திடீரென  உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதனால் எங்கள் கிராமமே சோகத்தில்  மூழ்கியுள்ளது என்றனர்.

Tags : Mallikeswarar Temple ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா