×

பிடமனேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்ற வேண்டும்

தர்மபுரி, செப்.15: தர்மபுரி அடுத்த பிடமனேரி ஏரியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில், சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், பிடமனேரியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரி எப்போதும் பாசம் படிந்தே காணப்படுகிறது. கழிவுநீர் கலப்பதால், ஏரிக்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் பொது குழாய் தண்ணீரையும், குடிநீரையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஏரி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவு நீரை சுத்திகரித்து, ஏரியில் கலக்க வேண்டும். ஏரியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அடிக்கடி அப்புறப்படுத்த  வேண்டும். ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bidmaneri Lake ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்