×

2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்போன்

கடலூர், செப். 15: கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன கைபேசி வழங்கப்பட்டுள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக மென்பொருள் வழியாக அங்கன்வாடி குழந்தைகள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்களை தேசிய அளவில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சிஏஎஸ் என்ற பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த மென்பொருள் வழியாக அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் மையங்களில் இருக்கும் குழந்தைகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் அங்கன்வாடியின் முழு விவரத்தையும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒரே நேரத்தில் கண்காணிக்க இயலும்.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஊட்டச்சத்து மாதத்தை அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பாக கடலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று மாவட்டத்திலுள்ள 2023 அங்கன்வாடி மையங்களுக்கு சிஏஎஸ் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட கைபேசிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கினார். முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைபேசி செயலியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்த்தல் குறித்த பயிற்சி அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பழனி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், செல்வி, மோனிஷா, மனோசித்ரா மற்றும் சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : centers ,Anganwadi ,
× RELATED செல்போனுக்கு தடை அகிலேஷ் கேள்வி