புதுவை பஸ் நிலையம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது

புதுச்சேரி, செப். 15:  புதுவை பஸ் நிலையம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள்  கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்த திருக்கோவிலூரைச் சேர்ந்த முக்கிய புள்ளியை தனிப்படை வலைவீசி தேடி வருகிறது.  புதுவையில் விபசாரம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறை தலைமைக்கு புகார் சென்றன. இதையடுத்து டிஜிபி பாலாஜி வஸ்தவா உத்தரவின்பேரில் சில தினங்களுக்கு முன்பு சீனியர் எஸ்பி அகன்ஷா யாதவ் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் அதிரடி ரெய்டு நடத்தி விபசார கும்பலை கைது செய்தது. தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 அடுத்த கட்டமாக கஞ்சா விற்பனை கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். அதன்பேரில் ஒவ்வொரு காவல் சரகத்திலும் அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கஞ்சா விற்பனையை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.  நேற்று புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் நகர், 3வது குறுக்குத் தெருவில் சிலர் சந்தேகபடும்படியாக சுற்றிக் கொண்டு இருப்பதாக உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற எஸ்ஐ வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் அங்குள்ள கேசவன்(22) என்பவரின் வீட்டில் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

 அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த கேசவனின் நண்பர் ருத்ரேஷ் என்ற ருத்ரேஷ் மணியையும் (21) உடனே கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

 அவரிடம் தனிப்படை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவர்கள் கஞ்சா விற்றதும், இவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கஞ்சா சப்ளை செய்ததும் தெரியவந்தது. தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அங்கு விரைந்துள்ளது.

Related Stories: