×

சாலைக்கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் பொதுமக்கள் புகார்

இளையான்குடி, செப். 15: சாலைக்கிராமத்தில் நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இளையான்குடி ஒன்றியத்தில், சாலைக்கிராமம் ஊராட்சி வளர்ந்து வரும் ஊராட்சிகளுள் ஒன்று. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலைக்கிராமத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர். மதுரை, சிவகங்கை, காரைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி பஸ், மற்றும் வேன்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால் இந்த சாலைக்கிராமத்தில், விரிவாக்கம் இல்லாத பஸ் ஸ்டாண்ட் பகுதியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் நிறுத்த இடம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் விலக்கிலிருந்து, மகாலிங்கம் கோயில் வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் விதி மீறி கட்டடங்கள் கட்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் பஸ் ஸ்டண்டு அருகே அரசு மற்றும் நீர்நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கும், உள் குத்தகைக்கும் விட்டுள்ளனர். இதனால் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பெயரளவில் நோட்டீஸ் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இதுவரை சாலைக்கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து இரண்டு முறை ஆர்டிஓ தரப்பிலும், ஏழு முறை வருவாய்த்துறை சார்பிலும் நோட்டீஸ் மட்டும் கொடுத்து வருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக இது சம்பந்தமாக பெயரளவில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சரிசெய்வதும் இன்றுவரை தொடர் கதையாகி வருகிறது. சாலைக்கிராமம் பகுதி வளர்ச்சியை கருத்தில் கொன்டு, வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறையினர் சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது