சென்னை ஐடி ஊழியர் பலி எதிரொலி அனுமதியில்லாத பேனர்கள் அதிரடியாக அகற்றம்

திண்டுக்கல், செப். 15:  சென்னை பள்ளி கரணை சாலையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்ததில், டூவீலரில் சென்ற ஐடி ஊழியர் சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து லாரி மோதி பலியானார். இதன் எதிரொலியாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என தொண்டவர்களுக்கு அறிவுறுத்தினர். திண்டுக்கல்லில் நேற்று மாநகராட்சி நிர்வாகம், போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து கட்சியினர், வணிக நிறுவனங்கள் வைத்திருந்த பேனர்களை தாங்களாகவே முன்வந்து அகற்றினர்.

மேலும் அகற்றப்படாத பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அப்புறப்படுத்தினர். ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி ஆணையாளர் தேவிகா ஆலோசனையின்பேரில் தாராபுரம் சாலை, பஸ்நிலையம், ஏபிபி நகர், திண்டுக்கல்- பழநி சாலை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இப்பணியினை நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் செய்தனர்.

இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

Related Stories: