×

ஒட்டன்சத்திரம் அருகே சாலை அகலமாக்கும் பணிக்காக பாலம் மூடல் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

ஒட்டன்சத்திரம், செப். 15:  ஒட்டன்சத்திரம் அடுத்த தங்கச்சியம்மாபட்டி சடையன்குளத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாவில் உள்ள 1000 ஏக்கர் நேரடியாகவும், 2500 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வந்தது. இக்குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலும், தனியார் ஆக்கிரமிப்பிலும் இருந்து வந்தது. விரைவில் பருவமழை துவங்கவுள்ளதையொட்டி தன்னார்வ அமைப்புகள் சுமார் 2.5 கிமீ தூரத்திற்கு சடையன்குளத்தை ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரியும், தனியார் ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

 நேற்று திருப்பூர் முதல் அவினாசி வரை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தங்கச்சியம்மாபட்டி- சடையன்குளம் பாதையில் கரைமாரியம்மன் கோயில் செல்லும் பிரிவு அருகேயுள்ள தரைப்பாலத்தை மூடி விட்டனர். இப்பாலத்தின் வழியாகத்தான் அருகேயுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் சென்று வந்தது. இப்பணி ஆரம்பிக்கும் போதே ஒப்பந்ததாரர்- அதிகாரிகளிடம் புதிய பாலம் அமைத்த பின்பு சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என  பொதுமக்கள், விவசாயிகள் கூறியிருந்தனர். ஆனால் பாலத்தை மூடியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை ஒப்பந்தாரர், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுப்பாலம் அமைத்த பின்பு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்