×

திருப்பூர் குமரன் கல்லூரியில் பாரதியார் தினவிழா

திருப்பூர்,செப்.15:  திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், கல்லூரி பேரவை தொடக்க விழா மற்றும் பாரதியார் தின விழா நேற்று நடந்தது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அமுதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார். உளவியல் ஆலோசகர் அபிநயா பேசுகையில், ‘‘இந்த வயதில் கண்டதையும் பற்றி சிந்திப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தேவையற்ற கவலைகளை தூக்கி வீச வேண்டும். ஆக்கபூர்வமானவற்றை பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டும். புதிதாக வரும் உறவுகள் நமக்கு தேவையற்றது. எப்போதும் உறவுகள் மட்டுமே நிலையானது.

 ஒழுக்கம், பணிவு இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். ஆகவே, இப்போது தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளாதீர்கள். செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதீர்கள். குறிக்கோளில் வெற்றி அடைய வேண்டும் என்றால், இப்போதே அதற்கு உழைக்க வேண்டும்,’’ பேரவையை தொடங்கி வைத்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கற்பகம் பேசுகையில், ‘‘பெண்கள் விடுதலைக்காக போராடியவர் பாரதியார். அந்த காலங்களில் பெண்கள் அடிமைப்பட்டு கிடந்தார்கள். இப்போது சுதந்திரமாக இப்படி அமர்ந்து இருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பாரதியார் தான்.

 விடுதலைக்காக கவிதை மூலமாக அவர் எழுப்பிய குரல்கள் தான், நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். இந்த சுதந்திரத்தை முழுமையாக நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கவிஞர்களுக்கு எல்லாம் அவர் ஒரு மகாகவி. பாரதிதாசன். நாமக்கல் கவிஞர் போன்ற பல்வேறு கவிஞர்களை உருவாக்கியவர். அவர் பாடலின் தாக்கம் இல்லாமல் எந்த கவிதையும் இல்லை,’’ என்றார்.  முடிவில் கல்லூரி பேரவை தலைவி தாமரைச் செல்வி நன்றி கூறினார்.

Tags : Bharathiar ,festival ,Kumaran College ,Tirupur ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...