கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, செப். 15:   ஈரோட்டில் புதைவட மின் கேபிள் திட்டத்திற்காக கம்பிகள் அகற்றும் போது கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு மாநகரில் புதைவட மின் கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மின் கம்பங்களின் வழியே மின் கம்பிகள் செல்லாமல், நிலத்தில் குழி தோண்டி, குழாய்களின் உட்புறம் மின் கேபிளை கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்ட பணிகள் நடந்து முடிந்த பகுதிகளில் புதைவட கேபிள் மூலமாகவே மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு நாச்சியப்பா வீதியில் மின் கம்பத்தில் இருந்து மின் கம்பியை மாற்றி புதைவட கேபிளில் இணைக்கும் பணிகள் நடந்தது. பின்னர், மின் கம்பங்களில் இருந்து தேவையற்ற மின் கம்பிகள் அகற்றும் பணி நடந்து வந்தது.

 அப்போது, நாச்சியப்பா வீதியில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் நின்றிருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: ‘‘போதிய முன்னேற்பாட்டுடன், கம்பத்தை அகற்றினோம். இரும்பு கம்பம் என்பதால் பிடிமானம் இல்லாமல் கீழே சாய்ந்தது. கம்பங்கள் அகற்றும் பணி இனி பாதுகாப்புடனும், கூடுதல் பணியாளர்களுடன் நடக்கும்,’’ என்றனர்.

Related Stories: