ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ.3 கோடி மதிப்பில் 115 வாகனம்

ஈரோடு, செப். 15:  ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 115 மோட்டார் மற்றும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவைகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 300 டன்னுக்கு மேல் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லா நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது. மேலும் வாகனம் மூலம் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து வருகின்றனர்.  

 இந்த குப்பைகளை மைக்ரோ கம்போஸ்டிங் சென்டருக்கு அனுப்பி உரமாக தயாரிக்கின்றனர். இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை பெற்று வந்தனர்.

அந்த வண்டி சிறியதாக இருப்பதால், அதிகளவில் குப்பைகளை சேகரிக்க முடியாமலும், அதிக நேரம் வீணாகி வந்தது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குப்பைகளை சேகரிக்க மோட்டர் வாகனம் மற்றும் பேட்டரி வாகனம் வாங்க ரூ.3.02கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 25 மோட்டார் வாகனம் (டாடா ஏஸ்) ரூ.1.40 கோடியிலும், 90 பேட்டரி வாகனம் ரூ.1.62 கோடிக்கு வாங்கப்பட்டது. இந்த வாகனங்கள் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வாகன பதிவிற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இதில் வாகன பதிவு முடிந்ததும் 4 மண்டல அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: