×

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

ஈரோடு, செப். 15:   நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கீழ்பவானி கசிவு நீர் திட்டமான சூரம்பட்டி அணைக்கட்டானது கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. அணைக்கட்டில் இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் பாசனம் நடந்து வருகிறது. இதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடைமடை பகுதியான நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உபரி நீர் காவிரியில் கலக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்காலில் பல ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் விவசாயிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பின்னர் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு சூரம்பட்டி அணைக்கட்டு தூர்வாரப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த மாதம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து அதன் கசிவு நீர் சூரம்பட்டி அணைக்கட்டுக்கு வருகிறது. மேலும் மழை நீரும் சேர்ந்து வருவதால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி உபரி நீர் பெரும்பள்ளம் ஓடையில் வீணாக வெளியேறி வருவதால், சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
 இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால், வாய்க்காலில் தண்ணீர் திறந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அணைக்கட்டின் உயரம் தற்போது கூடுதலாக 90 சென்டி மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு கடைமடை வரை தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே பாசன விவசாயிகள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும். எனவே உடனடியாக பொதுப்பணி துறையினர் தண்ணீர் திறக்க வேண்டும் ,’’என்றனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு