×

சுருளியில் நுழைவுக்கட்டணம் உயர்வு அருவியை நோக்கி பேரணி: அனைத்து கட்சிகள் முடிவு

கம்பம், செப்.11: சுருளியில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து அருவியை நோக்கி பேரணி நடத்துவது என, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் இராம கிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், கம்பம் நகரச்செயலாளர் நாகராஜன், தி.மு.க நகரச்செயலாளர் வக்கீல் துரை நெப்போலியன், காங்கிரஸ் நகரச்செயலாளர் போஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி தங்கம், நகரச்செயலாளர் கல்யாணசுந்தரம், மதிமுக நகரச்செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சுருளி அருவியில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர், துணை முதல்வர், வனத்துறை அமைச்சர், எம்பி, மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்து வலியுறுத்துவது, கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வருகின்ற 19ம் தேதி அனைத்து மக்களையும் சந்தித்து கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்வது, 27ம் தேதி கம்பம், காமயகவுண்டன்பட்டி, கூடலூரிலிருந்து அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்புகள், சேவா அமைப்புகள் 3 பகுதிகளாக பிரித்து, சுருளி அருவியை நோக்கி மக்கள் பேரணியாக செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து கட்சியைச்சேர்ந்த நிர்வாகிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும், ஒருங்கிணைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் கம்பம் நகரச்செயலாளர் நாகராஜன் செயல்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Falls ,parties ,
× RELATED இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம்...