×

தேவாரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் கப்பை செடிகள் நாசம்

தேவாரம், செப்.11: தேவாரம் மலையடிவாரத்தில் கூட்டமாக புகுந்த 3 யானைகள் கப்பை செடிகள், சொட்டுநீர் பைப் போன்றவற்றை சூறையாடி சென்றது. தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள அடர்ந்த காடுகளில் தாய் தனது இரண்டு குட்டிகளுடன் தங்கி தினந்தோறும் விளைந்த பயிர்களை நாசம் செய்கிறது. இதனை அடர்ந்த காடுகளுக்குள் விரட்டவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அசட்டையாக உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தேவாரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சியாமளா என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள் கூட்டமாக சென்று இங்குள்ள கப்பை, தக்காளி, நிலக்கடலை, பயிர்களை சேதம் செய்துள்ளது. இதேபோல் தோட்டத்தில் போடப்பட்டிருந்த குழாய்கள், சொட்டு நீர் குழாய்கள் போன்றவற்றையும் நாசப்படுத்தி சென்றது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலையில் தோட்டங்களுக்கு சென்று பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு கவலை அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வரவில்லை என்ற புகார் உள்ளது. பெயரளவில் யானைகளை விரட்டுவதும், பின்பு விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : Wild Elephants ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...