×

அரசு தலைமை மருத்துவமனையில் இரவில் தங்க இட வசதியில்லாமல் நோயாளிகளின் உறவினர்கள் அவதி

நாமக்கல், செப்.11: நாமக்கல்-மோகனூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது.  நாமக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு,  பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க தினமும் உறவினர்கள்  வந்து செல்கின்றனர். இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இரவில் தங்கியிருக்க போதுமான இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக  பச்சிளம் குழந்தைகள் வார்டு முன் நோயாளிகளின் உறவினர்கள் ஓய்வெடுக்க  சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமானோர் வருவதால், இந்த இடத்தில் சிலரே தங்க முடிகிறது.

இடம் கிடைக்காதவர்கள் புதியதாக கட்டிட பணி நடந்து வரும் பகுதியில் ஆபத்தான இடத்தில் இரவில் தங்குகிறார்கள். வார்டின் முன் திறந்த வெளியிலும் ஏராளமானவர்கள் இரவில் படுத்து தூங்குகிறார்கள். நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளுறை மருத்துவர் தங்கியிருக்க குடியிருப்பு கட்டப்பட்டு, பல ஆண்டாக எந்தவித பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் உள்ளுறை மருத்துவர்கள் யாரும் இங்கு தங்குவது கிடையாது. நகரில் சொந்தமாக வீடு இருப்பதால், உள்ளுறை மருத்துவர் இரவில் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். தற்போது இரவில் நோயாளியின் உறவினர்கள் தங்கியிருக்க போதுமான இடவசதி இல்லாத நிலை உள்ளதால், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள கட்டிடங்களை நோயாளிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கி கொடுத்தால், வசதியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Relatives ,Government Hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்