அரசு போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்காக “விர்ச்சுவல் லேர்னிங்” மொபைல் ஆப் அறிமுகம்

நாமக்கல், செப்.11: அரசு போட்டித்தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை  சார்பில் ‘விர்ச்சுவல் லேர்னிங்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர். நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் மூலம், கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு போட்டித்தேர்வை எதிர்கொள்ள பயிற்சி பெற்றனர். இதில் காவல் மற்றும் வனத்துறை, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று 60 பேர் அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், பயிற்சி வகுப்புகளுக்கு நேரடியாக வந்து மையத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்து படிக்கவும், அந்தந்த துறை சார்ந்தவர்கள் அளிக்கும் விளக்கங்களை கேட்க முடியாமலும் பலர் உள்ளனர். இவர்களின் வசதிக்காக  ‘விர்ச்சுவல் லேர்னிங்’ என்ற செயலி  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதிகா கூறியதாவது:  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு நேரில் வர முடியாத சூழலில் உள்ளவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தாங்கள் பணி செய்யும் இடத்திலேயே போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை படிக்க வசதியாக, தமிழக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் மத்திய அரசுப்பணி, ரயில்வே பணிக்கான தேர்வுகள், மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 மற்றும் 3 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் போட்டி தேர்வுக்கு தயாராவோர் யூசர் ஐடியையும், பாஸ்வேர்டையும் உருவாக்கி லாகின் செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பக்கத்தில், தங்களது ஆதார் கார்டை கொண்டு, தங்கள் சுயவிபரத்தை பதிவுசெய்ய வேண்டும். பின் போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். இதனை டவுன் லோடு செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் Virutval Learning Appயும் வேலை வாய்ப்புத் துறை புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.  இதை தங்களது ஆண்ட்ராய்டு செல்போனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த செயலியில் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளது. இதை படித்து தேர்வுக்கு தயாராகலாம். இவ்வாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Government Competitors ,
× RELATED வீடியோ பாடம், சுண்ணாம்பு கோடுகள் மூலம்...