பஸ் வசதி இல்லாததால் திருமங்கலம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் 4 கிராம மக்கள் வேண்டுகோள்

திருமங்கலம், செப்.10: பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் புதியதாக துவக்கப்பட்ட கள்ளிக்குடி தாலுகாவிலிருந்து தங்களது கிராமங்களை பிரித்து மீண்டும் திருமங்கலம் தாலுகாவுடன் இணைக்கவேண்டும் என நான்கு கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமங்கலம் தாலுகாவை இரண்டாக பிரித்து கடந்தாண்டு கள்ளிக்குடி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில் சிவரக்கோட்டை, குராயூர், கள்ளிக்குடி பிர்க்காகள் இணைக்கப்பட்டன. மீதமுள்ள திருமங்கலம் டவுன், கொக்குளம், பன்னீர்குண்டு பிர்க்காக்கள் திருமங்கலம் தாலுகாவிலேயே தொடர்கின்றன. இந்நிலையில் புதிய தாலுகாவில் இணைக்கப்பட்ட சிவரக்கோட்டை பிர்கா கிராமங்களான உலகாணி, சின்ன உலகாணி, கூடக்கோவில், நெடுங்குளம் ஆகிய நான்கு கிராமமக்கள் தங்களை மீண்டும் திருமங்கலம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து உலகாணியை சேர்ந்த சுந்தரராஜன் கூறுகையில், திருமங்கலத்திலிருந்து கூடக்கோவில், உலகாணி, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரடியாக டவுன் பஸ் வசதியுள்ளது.

நாங்கள் பல ஆண்டுகளாக திருமங்கலம் வந்தே பழகி விட்டோம். தற்போது எங்கள் கிராமங்களை புதிதாக துவக்கப்பட்ட கள்ளிக்குடி தாலுகாவில் இணைத்துள்ளனர். கள்ளிக்குடிக்கு எங்கள் பகுதியிலிருந்து டவுன் பஸ் வசதிகள் எதுவும் கிடையாது.தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமானோல் சமத்துவபுரம் அல்லது மேலக்கோட்டை விலக்கில் இறங்கி கள்ளிக்குடி மற்றொரு பஸ் பிடிக்கவேண்டும். எங்களுக்கு திருமங்கலம் தான் மிக அருகேயுள்ளது. எனவே மறுபடியும் எங்களை திருமங்கலம் தாலுகாவுடன் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து திருமங்கலம் ஆர்டிஓ முருகேசனிடம் கேட்டபோது, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே புதிய தாலுகா உருவாக்கப்பட்டு கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமமக்கள் இதுகுறித்து என்னிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளேன். மேலும் வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.

Related Stories: