மாநில மொழிகளில் ரயில்வே போட்டித் தேர்வு தொழிற்சங்கங்கள் வரவேற்பு

மதுரை, செப். 11: மாநில மொழிகளில் போட்டித் தேர்வை நடத்தலாம் என்ற அறிவிப்பை, ரயில்வே தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தமிழக மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அறிவிப்புக்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரயில்வே தொழிற்சங்கங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, திமுக எம்பிக்கள் மற்றும் எம்.எல்ஏக்கள், ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, இந்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வாபஸ் பெற்றதோடு, இத்தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தடையில்லை என அறிவித்தது.

இதுகுறித்து மதுரை தட்சிண ரயில்வே எம்ளாய்ஸ் யூனியனின் கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ``மாநில மொழிகளில் தேர்வை நடத்த வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பால், தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமங்களை சேர்ந்த பின்தங்கிய மாணவர்களுக்கு சமூக ரிதியாகவும், கல்வி ரீதியாகவும் சம வாய்ப்பு கிடைக்கும், அவர்கள் ரயில்வே தேர்வை எளிதாக எதிர்கொள்வார்கள். மேலும் ரயில் பயணிகளுக்கான சேவையை, சிறப்பாக செய்ய முடியும்’’ என்றார்.மதுரை தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் கூறும்போது, ``ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கு பேசப்படும் மொழிகளிலேயே போட்டித் தேர்வை நடத்த வேண்டும் என, எங்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் தமிழக மாணவர்கள், ரயில்வே பணிகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது’’ என்றார்.

Related Stories: