×

காட்டேரி பகுதியில் கழிப்பிடம், நிழற்குடை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி, செப். 11: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் கழிப்பறை இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மஞ்சூர், கொலக்கொம்பை, சேலாஸ், மஞ்சக்கொம்பை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பாக காட்டேரி பகுதி உள்ளது. இங்கிருந்து குன்னூர் 3 கி.மீ., தூரம் இருந்தாலும், பெரும்பாலான பயணிகள் இங்கிருந்தே சமவெளிப் பகுதிகளுக்கு பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். அதேபோல், மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் இருந்து வரும் பயணிகளும் இங்கு இறங்கி கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். முக்கிய சாலை சந்திப்பாக உள்ள இப்பகுதியில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை ஒரு பொது கழிப்பறையோ அல்லது இலவச  கழிப்பறையே கட்டிதரப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் பயணிகள் அவசர தேவைகளுக்கு கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி காட்டேரி பகுதிகளில் நவீன கழிப்பிடம் அமைக்க வேண்டும்.
மேலும், இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. இதில், அங்கிருந்த நிழற்குடையும் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்ததால், அகற்றப்பட்டது. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள் கொட்டும் மழையிலும் சாலைகளிலேயே பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியுளளது. எனவே, இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் நிழற்குடை  அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : vampire area ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி