தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விஏஒ சான்று கிடைக்காமல் தவிப்பு வேறு யாரிடம்தான் வாங்குவது? மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல், செப். 11: கிராம நிர்வாக அலுவலரின் திருமண சான்று கிடைக்காததால் கோயிலில் திருமணம் நடத்த முடியாமலும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமலும் மணமக்கள் தவித்து வருகின்றனர்.கோயில்களில் திருமணம் செய்ய வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்தப்படும். அதேபோல், தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் பணம் நிதியுதவி திட்டத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்குவர். இந்த திருமணச்சான்று பெற இதுவரை கிராம நிர்வாக அலுவலரிடம் மணமகன், மணமகள் குடும்பத்தினர் முறையாக உரிய ஆவணத்தை காட்டி, சான்றிதழ் பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து கொடுப்பார்கள்.இந்நிலையில் திருமண சான்றினை, கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், திருமண சான்று விண்ணப்பத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்து போட வேண்டாம் என கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.

Advertising
Advertising

இதன் காரணமாக தற்போது திருமணம் தொடர்பான சான்றிதழிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்து போட மறுத்து வருகின்றனர். தற்போது ஆவணி மாதம் என்பதால் திருமண வைபவங்கள் களைகட்டியுள்ளன. ஆனால் வசதியில்லாத ஏழை குடும்பத்தினர் கோயிலில் திருமணம் செய்ய திருமணச்சான்று கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதேபோல் திருமண நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் திருமண சான்றிதழுக்காக கிராம நிர்வாக அலுவலர்களிடம் செல்கின்றனர். ஆனால் அவர்கள் சான்றிதழ் கொடுக்க முடியாது என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த செல்வி கூறுகையில், ‘கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு சான்றிதழ் கேட்டால் விஏஓ சான்றிதழ் தர மறுக்கிறார். கேட்டால் நீதிமன்ற உத்தரவு என கூறுகின்றனர். திருமண நிதியுதவி பெறுவதிலும் இதே சிக்கல் நீடித்து வருகிறது. இவர்கள் தரவில்லையென்றால் வேறு யாரிடம் வாங்க வேண்டும் என முறையான அறிவிப்பு இல்லை. தாலுகா அலுவலகத்திலும் சரியான பதில் இல்லை. உடனே மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.இதுவரை இல்லை முறையான அறிவிப்புதிண்டுக்கல் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘அரசு தொடர்பான சான்றிதழ் பெற முதலில் நாங்கள் விண்ணப்பதாரரிடம் நேரில் விசாரித்து, பின் சான்றிதழ் கொடுப்போம். தற்போது திருமண சான்றிதழ் கொடுக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால், கொடுக்க மறுக்கிறோம். திருமண சான்று வேறு எந்த அதிகாரி கொடுக்க வேண்டும் என இதுவரை முறையான அறிவிப்பு இல்லை’ என்றார்.

Related Stories: