ஆக்கிரமிப்பின் பிடியில் ஆயக்குடி பாப்பாகுளம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பழநி, செப். 11: பழநி அருகே ஆயக்குடி பாப்பன்குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பழநி அருகே ஆயக்குடியில் பாப்பாகுளம் உள்ளது. சுமார் 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் இப்பகுதி விவசாயிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிறுசிறு விவசாயங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது விவசாயிகள் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீண்ட நாள் பயிர்களான கொய்யா, இலவமரம் போன்றவை நட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

    மேலும், குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியிலேயே போர்வெல் அமைத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் குளத்தின் நீர்பிடிப்பு பரப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து தற்போது குட்டைபோல் மாறி விட்டது. இக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரி சீரமைக்க ரூபாய் 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குளத்தின் பாதி பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் விவசாய நிலங்களை மழைநீர் தேங்காத அளவிற்கு மேடாக்கி விட்டனர். இனிவரும் காலம் மழைகாலமாக இருப்பதால் குளத்திற்கு வரும் தண்ணீரின் பெரும்பகுதி சேமிக்க முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து குளத்தின் எல்லைகளை வரையறை செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: