பொள்ளாச்சி அருகே ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

கோவை, செப்.11: குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை டி.எஸ்.பி ரவிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில் வளந்தாயமரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிவிஎஸ் மொபட்டை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 3 மூடைகளில் 150 கிலோ அளவிலான ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் அவர் ஆனைமலை, வடக்கலூர் அம்மன்கோவில் வீதியை சேர்ந்த இப்ராஹிம் என்பதும் அவர் மீது ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பல வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின் அவரிடம் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து ரேசன் அரிசியை பெற்று அதை கேரளாவில் உள்ள தெளபிக் என்பவருக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக தீபக், மற்றும் அரிசி கடை உரிமையாளரான கேரள மாநிலம், கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த தெளபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் சர்வதேச பலூன்...