சம்பளம் பிடித்தம் செய்வதால் ஏமாற்றம்

வால்பாறை, செப். 11:  வால்பாறை பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டு உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் சம்பளம் பிடித்தம்  செய்வதால் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். வால்பாறை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. இதில் ஜார்கண்ட், அசாம் போன்ற பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை எஸ்டேட்களில் தங்கி தோட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.320 மற்றும் இதர எஸ்டேட் பணப்பயன்கள், இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுள்ளனர்.  இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வந்துள்ள ஏஜென்ட்கள் 7 நாட்களுக்கு சம்பளம் பெற்று, 5 நாட்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர்.

காஞ்சமலை எஸ்டேட்டில் இருந்த 8 பேர்கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்  நேற்று சொந்த மாநிலத்திற்கு திரும்பினர். தோட்ட தொழிலில், தேயிலை பறிக்க  ஒப்பந்த முறையில் பணியாளர்களை அமர்த்தியது தற்போது தெரியவந்துள்ளது. ஒப்பந்தாரர்களிடம், கொத்தடிமைகளாக பலர் பணியாற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தோட்ட பணிகளில் இடைத்தரகர்களை ஒப்பந்ததாரராக நியமிக்க அரசு அனுமதிக்க கூடாது எனவும்  பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

Tags :
× RELATED செங்கரும்புகளை எதிர்பார்த்த விலைக்கு...