பெருந்துறை சிப்காட்டில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்ட தார்சாலைக்கு பேட்ஜ் பணி

பெருந்துறை, செப். 11:   பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் ரூ.13 கோடியில் அமைத்த தரமற்ற சாலை ஆங்காங்கே பெயர்ந்ததால், அதிகாரிகள் அவசரமாக பேட்ஜ் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெருந்துறை சிப்காட் 2700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. சிப்காட் வளாகத்தை சுற்றி 42 கி.மீ., அளவுக்கு தார்சாலை ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெரும்பாலான தார்ச்சாலைகள் பழுதடைந்து விட்ட காரணத்தால் அவற்றை புதுப்பிக்க சிப்காட் இயக்குனரால் கடந்த ஆண்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள மொத்தம்  42.57 கி.மீ., தூரத்தில், தற்போது 37.50 கி.மீ., தூரம் சாலை பழுதடைந்துள்ளது. இதனை புதுப்பிக்க ரூ.13 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.

Advertising
Advertising

தற்போது மெயின் சாலையில் போடப்பட்ட தார் சாலை 15 நாட்களிலேயே ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இது தவிர முழுவதும் பழுதடைந்த சாலையை சமன் படுத்தாமல் தார் சாலை அமைத்து வருவதால், சாலை மேடு பள்ளமாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டதை அடுத்து புதிய தார்சாலையில் பெரும்பாலான இடங்களில் அவசர அவசரமாக பேட்ஜ் பணி நடந்து வருகிறது. சிப்காட் திட்ட நிர்வாகம் மூலம் நடக்கும் இப்பணியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: