தரமில்லாத பாதாள சாக்கடை பணி

பொள்ளாச்சி,  செப். 11:   பொள்ளாச்சி நகராட்சி  பகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் வடிகால் வாரியம்   மூலம் ரூ.110 கோடியில் பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது.மகாலிங்கபுரம்,  வெங்கடேசாகாலனி, ஜோதிநகர், கரிகால்சோழன்வீதி, ஆரோக்கியநாதர்வீதி, ஏபிடிரோடு  உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் பாதாள சாக்கடை பணி ஓரளவு  நிறைவடைந்துள்ளது. இதுவரை சுமார் 80சதவீதம் பாதாள சாக்கடை பணி  நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்த  பகுதிகளில் புதிதாக ரோடு போடப்பட்டது. இருப்பினும், பல்வேறு இடங்களில்  பாதாள சாக்கடைக்கு என பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட  பகுதிகளில்   குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பணி  தரமில்லாமல் மேற்கொள்வது பொதுமக்களிடையே வேதனையை உண்டாக்குகிறது.

தற்போது ராஜாமில்ரோடு, நேதாஜிரோடு, மார்க்கெட்ரோடு உள்ளிட்ட பல இடங்களில்  பாதாள சாக்கடைக்கு என குளாய் பதிக்க குழி தோண்டப்பட்டு கான்கிரீட் அமைத்து   மூடப்பட்டுள்ளது. ஆனால், தரமில்லாத பணியால் அந்த வழியாக வாகனங்கள்  செல்லும் போது சிக்கி கொள்கிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளின்  அலட்சியபோக்கால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும்  பாதசாரிகளும் அச்சமடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று, காந்தி  வாரசந்தையிலிருந்து மார்க்கெட் ரோட்ரோட்டை நோக்கி வந்த லாரி ஒன்று, பாதாள  சாக்கடை பணி நடைபெற்ற பகுதியில் திடீர் என முன்சக்கரத்தின் ஒரு பகுதி  குழியில் இறங்கி லாரி சிக்கிக்கொண்டது. பின் ராட்சத கிரேன் மூலம் சுமார்  மூன்று மணிநேரத்திற்கு பிறகு, குழியில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இப்படி  நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், குடிநீர் வடிகால்வாரியம் மூலம்  பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பகுதி தரமில்லாமல் இருப்பது மேலும்  அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED பாதாளச் சாக்கடை பணி என்ற பெயரில்...