தீபாவளி ஆடை தயாரிப்பு ஆர்டர் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்

திருப்பூர், செப். 11: வெளிமாநிலங்களிலிருந்து தீபாவளி ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன. சாதகமான சூழல் நிலவுவதால், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 10 சதவீதம் ஆர்டர் அதிகரிக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஆர்டர் வழங்குகின்றனர். கோடை, மற்றும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை கால ஆடை தயாரிப்பு முக்கியமானதாக உள்ளது. பண்டிகை கால ஆடை தயாரிப்பில், தீபாவளி தனித்துவம் பெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி ஆடை தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. நடப்பு ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்கள் நெருங்கும் நிலையில், தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள், திருப்பூரை நோக்கி வரத்துவங்கியுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் பிற மாவட்ட வர்த்தகர்கள், ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்க, திருப்பூர் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நிறுவனங்கள், சாம்பிள் ஆடை தயாரித்துக் கொடுத்து, பண்டிகைக்கான ஆடை தயாரிப்பு ஆர்டர்களை பெற்று, விரைந்து முடிப்பதற்காக, உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளன.

தொழில்துறையினர் கூறுகையில், ‘‘தீபாவளி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பண்டிகை கால ஆர்டர்களை பெற, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாராகி விட்டனர். தமிழகம் உட்பட, ஆந்திரா, கர்நாடகா என தென்மாநிலங்களிலிருந்து தீபாவளி ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. குழந்தைகள், பெண்களுக்கான பேன்சி ரக ஆடைகள், பேன்ட் உட்பட பல்வேறுவகை ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி., வரி சார்ந்த குழப்பங்களெல்லாம் ஓரளவு நீங்கிவிட்டன. பஞ்சு, நூல் விலைகளும் சீராகவே உள்ளன. சாதகமான சூழல் நிலவுவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, 10 சதவீதம் வரை கூடுதலாக, ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தொழிலாளர் பற்றாக்குறை, மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. பண்டிகையை கருத்தில் கொண்டு, புதிய தொழிலாளரை பணி அமர்த்துவதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்திவருகின்றன. தங்களிடம் உள்ள தொழிலாளர்களுக்கு, கூடுதல் நேரம் பணி வழங்கியாவது, குறித்த காலத்துக்குள் பண்டிகை கால உற்பத்தி முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 450 தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு