அகழிகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கோவை, செப்.11:  தமிழகத்தில் மண் சரிந்து மூடிய அகழியை தூர் வாரி சீரமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன எல்லை தாண்டி, கிராமங்களுக்கு வரும் யானைகள் நேரிடை மின்சாரம் பயன்படுத்தும் விவசாய தோட்டத்து வேலிகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. விவசாய தோட்டங்களில் பூச்சி கொல்லி மருந்து தெளித்த பயிர்களை சாப்பிடும் யானைகள், குடல்  புழு நோய் தாக்கி இறப்பதும் நடக்கிறது. வனப்பகுதியில் மழை பெய்தும், தடுப்பணைகளில் நீர் தேங்கியும் யானைகள் கிராமங்களுக்கு வருவது குறையவில்லை.
யானைகளால் கடந்த ஆண்டில் 1,220 ஏக்கரில் விவசாய பயிர்கள் நாசமாகியதாக தெரியவந்தது. கோவை, பொள்ளாச்சி, சத்தி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் யானைகளால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக வனத்துறைக்கு புகார் கிடைத்துள்ளது. மாநில அளவில் 40 சதவீத யானைகள் அடிக்கடி கிராமங்களுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.  யானைகளின் வருகையை தடுக்க கடந்த ஆண்டில் 11 வன மாவட்டங்களில் 34 கி.மீ தூரத்திற்கு அகழி அமைக்கப்பட்டது.

இதுவரை 560 கி.மீ தூரத்திற்கு வனத்துறையில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட சுமார் 270 கி.மீ தூர அகழி மண் மூடி வீணாக கிடப்பதாக தெரிகிறது. இந்த அகழியை சீரமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மண் மூடிய அகழியை சீரமைத்தால் யானைகளின் வருகை கட்டுபாட்டிற்குள் வரும் வாய்ப்புள்ளது. வனத்துறையினர் கூறுகையில், ‘‘ மழை காலங்களில் அகழியில் மண் சரிவு ஏற்படுகிறது. இதை தடுக்க ஆண்டிற்கு ஒரு முறை அகழியை தூர் வாரி சீரமைக்கவேண்டியுள்ளது. அகழியை சீரமைக்க சில விவசாயிகள் உதவி செய்ய முன் வருகின்றனர். யானைகளை தடுப்பதில் சூரிய மின் வேலியை காட்டிலும் அகழி தான் பாதுகாப்பான திட்டமாக இருக்கிறது, ’’ என்றனர்.

Tags :
× RELATED விவசாயிகள் ஏமாற்றம்