பாதாள சாக்கடை குழாயில் வெளியேறும் கழிவுநீர்

ஈரோடு,  செப். 11:   ஈரோடு கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் இருந்து  வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஈரோடு  மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாதாள  சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர்  குழாய்கள் இணைப்பு பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி  மாநகராட்சி பகுதியில் 9 ஆயிரத்து 500 குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர்  குழாய்கள் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை  குழாயில் வரும் கழிவுநீர் அனைத்தும் ஈரோடு அருகே வெண்டிபாளையம் பீளமேடு  என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்  சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் உப்புத்தன்மை ஆய்வு  செய்யப்பட்டு காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.

இந்நிலையில் ஈரோடு  கோட்டை காசியண்ணன் வீதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு  கழிவுநீர் வெளியேறி ரோட்டில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம்  வீசுவதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை  குழாய்களில் அடைப்புகளை சரி செய்யும் பகுதிகளில் உள்ள மூடிகளில் இருந்து  இந்த கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: