ரயில்வே விதிமுறை குறித்து விழிப்புணர்வு 2 மாதமாக குற்ற சம்பவங்கள் குறைப்பு

ஈரோடு, செப். 11:   ஈரோடு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளான காவேரி ஸ்டேஷன், மாவேலிபாளையம், பாசூர், சங்ககிரி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதன் மூலமாக கடந்த 2 மாதமாக குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜேந்திரகுமார் மீனா கூறியதாவது: காவிரி ரயில்வே ஸ்டேஷன், பாசூர், தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளங்கள் செல்கிறது. விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி செல்லும் இளைஞர்கள் தண்டவாளத்தில் கற்களை வைப்பதும், வேகமாக செல்லும் ரயில் பெட்டியின் மீது கற்களை வீசுவதும் போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகும் என்பது அறியாமலே சிறுவர்கள் விளையாட்டாக செய்து வந்தனர்.

இதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் பல்வேறு பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். ரயில்வே லேவல் கிராசிங் பகுதியை தவிர மக்கள் மற்ற தண்டவாள பகுதியை கடக்க கூடாது. மேலும் இளைஞர்கள் விளையாட்டாக வைக்கும் கற்கள் போன்றவற்றால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினோம். இதன் காரணமாக கடந்த 2 மாதமாக ஈரோடு ரயில்வேக்குட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களும், தண்டவாளங்களில் கற்கள் வைப்பது போன்ற சம்பவங்களும் குறைந்து விட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.

Related Stories: