அரியலூர் மாவட்டம் முழுவதும் நான்கரை லட்சம் பனைமர விதைகள் விநியோகத்துக்கு ரூ.45 லட்சம் ஒதுக்கீடு

அரியலூர், செப். 11: அரியலூர் மாவட்டம் முழுவதும் நான்கரை லட்சம் பனைமர விதைகள் விநியோகத்துக்கு ரூ.45 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பனைமரங்களின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், வேளாண்மை உற்பத்தியை உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு புதிய உத்திகளை புகுத்தி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பனைமரம் தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது. பனைமரத்தில், வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை-பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை என அனைத்து பாகங்களுமே பயன்தர கூடியது.

இந்த காரணங்களாலேயே பனைக்கு ‘கற்பக விருட்சம்” என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இம்மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் ஆரோக்கியமான பானமாகும். நூங்கும், பனங்கிழங்கும் உணவாக பயன்படுகின்றன.இவற்றின் ஓலை, கூடைகள் தயாரிக்கவும், கைவினை பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது. தண்டுப்பகுதி வீடு கட்ட பயன்படுகிறது. பனஞ்சாறு கற்கண்டாகவும், கருபட்டியாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் உணவு ழகத்தில் ஆரோக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பனை மரங்களின் சாகுபடியை உயர்த்தி பனைமரங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தமிழக முதல்வர், 110 விதியின்கீழ் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனைமரங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனைமரங்களை அதிகளவில் வளர்ப்பதற்கு முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.10 கோடி செலவில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்அறிவித்தார். அதன்படி நடப்பாண்டில் 2 கோடி பனைமர விதைகளை மானாவாரி விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கத்தின்கீழ் மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டு பனைமர விதைகள் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு எக்டேர் மானாவாரி நிலத்துக்கு 50 பனைமர விதைகள் வீதம் விநியோகிக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் 4.5 லட்சம் பனைமர விதைகள் விநியோகத்துக்காக ரூ.0.45 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதேபோன்று மானாவாரி நிலங்களை பசுமை போர்வை போன்று மாற்றும் வகையில் நடப்பாண்டில் எக்டேருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன் தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் பலன் தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்துக்காக ரூ.18 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.மேலும் பனைமர விதைகள் நடும் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், நாட்டு நலப்பணி திட்டம், பசுமைப்படை மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் ஈடுபட வேண்டும்.மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளின் பனை மற்றும் இதர பயன் தரும் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை