டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால் 2 நாட்களில் சரி செய்ய முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மனு

பெரம்பலூர், செப். 11: நுகர்வோரே சொந்த செலவில் சரி செய்யும் மறைமுக நிர்பந்தத்துக்கு ஆளாக்காமல் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் மின்வாரிய கெடுவின்படி 2 நாட்களில் சரி செய்ய முன்னுரிமை பதிவேட்டில் பழுதடைந்த உடனடியாக குறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூரில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் மனு அளித்தார்.பெரம்பலூர் நான்குரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலக கூட்டரங்கில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்தார். பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் (நகரம்) மாணிக்கம் வரவேற்றார்.கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட 25 உதவி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 252 கிராமங்களில் மின்சாரம் வருகிற பாதையில் ஏற்படும் மின்கம்பிகள் உராய்வதை, மின் கம்பிகள் மரக்கிளையில் உராய்வதை சரி செய்து அதில் உள்ள கோளாறுகளை நிவர்த்தி செய்ய முடியாததால் டிரான்ஸ்பார்மர் தொடர்ந்து பழுதடைந்து வருகிறது. அதிகப்படியான டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டு வருவது குறித்து மின்சார அலுவலகத்துக்கு தெரிவித்தால் அதிகாரிகளின் வருத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மின் நுகர்வோர்கள் தங்களது சொந்த செலவில் காயில் கட்ட ஆகும் செலவை ஏற்கிற மறைமுக நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற மறைமுக நிர்ப்பந்தம் கொடுக்காமல் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விட்டால் அதை மின்வாரிய கெடு 2 நாளில் சரி செய்ய முன்னுரிமை பதிவேட்டில் பழுதடைந்தவுடன் உடனடியாக குறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் காடூர், நல்லறிக்கை பகுதிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் பவர் ஹவுஸ் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி சரியான மின் அழுத்தத்தில் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்டுவதற்கு கட்டுமான இணைப்பு பெற்றவர்களிடம் வேலை முடிந்தவுடன் மின் கட்டண விகித மாற்றம் செய்யாமலே காலம்தாழ்த்தி மாதக்கண க்கில் அலைக்கழிக்கப்பட்டு வருவதை தவிர்த்து, மின்வாரியம் நிர்ணயித்த கெடு காலத்திற்குள் மின்கட்டண விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.கூட்டத்தில் 17 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் வரதராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் அரும்பாவூர், காடூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.அவமதிக்கப்படும் விவசாயிகள்பெரம்பலூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. மிகச்சிறிய, நெருக்கடி மிகுந்த, சின்னஞ்சிறிய அரையில் நடத்தப்படும் இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை தருவதற்காக வரும் விவசாயிகள்  சங்க பிரதிநிதிகள், மின் நுகர்வோர்கள் வெளியே காத்திருந்து ஒவ்வொருவராக உள்ளே வந்து நின்றபடி மனுக்களை அளிக்க வேண்டியுள்ளது. கூட்டரங்கில் முழுமையாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள்,  இளநிலை பொறியாளர்கள் மட்டுமே அமர்ந்து கொள்ள இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுகர்வோர்கள் அமர வசதியின்றி பாரபட்சமாக நடத்தப்படும் இந்த குறைதீர்க்கும் கூட்டம் அதன் அருகிலேயே 50 மீட்டர் தொலைவில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலுள்ள பிரமாண்ட கூட்டரங்கில் நடத்தப்பட்டால்  அனைவரும் அமர வழியுள்ளது. இதை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் செய்யாதது ஏனென்று விவசாயிகள் சங்கத்தினர், மின்நுகர்வோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags :
× RELATED பிரித்வி அதிரடியில் இந்தியா ஏ வெற்றி