அவசரகதி, தரமற்ற முறையில் அமைப்பு காவல்கிணறில் 10 நாளிலேயே சேதமடைந்த புதிய தார்சாலை

பணகுடி, செப். 11: பணகுடி அருகே காவல்கிணறு ஊராட்சிப் பகுதியில் தரமற்ற முறையிலும், அவசர கதியிலும் அமைக்கப்பட்ட புதிய தார்சாலை 10 நாட்களுக்குக்கூட தாக்குப்பிடிக்கமுடியாமல் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட ன காமராஜர் நகர், கிறிஸ்துநகர் பகுதிகளில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கும்நிலையில் திடீரென தடை ஏற்பட்டது. இதே போல் பலமுறை சாலை அமைப்பதற்கான முயற்சிகள் நடக்கும்போதெல்லாம் ஏதேதோ காரணங்களால் இயலாமல் போனது. இதனால் ஆவேசமடைந்த காவல்கிணறு கிராமமக்கள் கடந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறித்தனர். இதையடுத்து மக்களை சமரசப்படுத்திய அதிகாரிகள், சாலை அமைக்கும்பணி துரிதமாக மேற்கொள்ளப்படும் எனக்கூறி கிராமசபை சிறப்பு கூட்டத்தை நடத்தி முடித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காமராஜர் நகர் பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு மீண்டும் சாலை அமைக்கும்பணி துவங்கியது. அதி தீவிரமாக நடந்துமுடிந்த இந்த சாலை அமைப்பு பணி அவசரகதியில் முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை அங்கு காவல்கிணறு கிராம மக்கள், பைக்கில் செல்லும் போதே சாலையில் உள்ள ஜல்லியும், தாரும் பெயர்ந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் கடும் அவதிக்கு உள்ளாகும் மக்கள் அளித்த தகவலின்ேபரில் ஒன்றியப் பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் புதிதாக அவசரகதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘‘அவசரகதியிலும், தரமற்ற நிலையிலும் புதிய சாலை அமைக்கப்பட்டதால் 10 நாட்கள்கூட தாக்குப்பிடிக்காமல் தற்போதே பெயர்ந்தும், சேதமடைந்தும் வருகிறது.  இதுகுறித்த விவரம் மற்றும் புகைப்படங்களை கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பார்வைக்கு செல்போன் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.

Tags :
× RELATED அவசர காலத்தில் ராக்கெட்டில்...