ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் கருவேல மரங்கள் அகற்ற வனத்துறையினர் திடீர் தடை

ஆலங்குளம், செப். 11:  ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆலங்குளத்தில் உள்ள தொட்டியான்குளம் நிலத்தடி நீர், விவசாயம் என பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பயனளித்து வருகிறது. இதன்வாயிலாக 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன பெறும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் குளமே தெரியாத அளவிற்கு  கருவேல மரங்கள் புதர் போல படர்ந்து ஆக்கிரமித்தன. இதையடுத்து  கருவேலமரங்களை வேரோடு வெட்டி அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதே வேளையில் ஆலங்குளம் கால்வாய் நலக்குழு, பல்வேறு சமூகநல அமைப்பு, பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சீமைகருவேல மரங்களை அகற்றுமாறு பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுப்பணித் துறையினர் ஆலங்குளம் உதவிப் பொறியாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மரங்கள் வெட்டும் பணியாளர்களுடன் நேற்று காலை குளத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து மரங்களை வெட்டும் பணி துவங்கிய நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த தென்காசி வனத்துறை அலுவலர்கள் செல்லத்துரை, முருகேசன் மற்றும் வனத்துறையினர் கருவேல மரங்களை வெட்டும் பணியை தடுத்துநிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் வனத்துறையினர் அனுமதி வழங்க மறுத்தனர். கருவேல மரங்களை வேரோடு வெட்டி அகற்றும் பணிக்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியநிலையில் வனத்துறை அனுமதி மறுத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்வாய் சீரமைப்புக் குழு செயலாளர் ஜார்ஜ் தங்கம் கூறுகையில், ‘‘கருவேல மரங்கள் எதுவானாலும் நீர் நிலைகளுக்கு ஆபத்துதான். எனவே வனத்துறையின் இந்த செயல் வருந்தத்தக்கது. கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி விட்டு கரையில் பனை மரங்களையும்  குளத்தின் உள்ளே மேடுகள் அமைத்து பலன் தரும் மரங்களையும் நடுவதற்கு மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற முயற்சி எடுப்போம்’’ என்றார்.

Tags : Forest Department ,
× RELATED தேவாரத்தில் காட்டுயானைகள் மீண்டும்,...