×

அழிவின் விளிம்பில் தேனீக்கள் காப்பாற்ற நடவடிக்கை வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

க.பரமத்தி, செப். 11: அழிவின் விளிம்பில் உள்ள தேனீக்களை காப்பாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனீக்கள் சுறு சுறுப்பிற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றவை. தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரிக்கும் தேன் சுவையாவும், மருத்துவ குணம் வாய்ந்த மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. மரம் மற்றும் செடிகள் தங்களது அடுத்த சந்ததிகளை உருவாக்கிட தேனீக்கள் முக்கிய காரணியாக விளங்குகின்றன.தேனீக்கள் தேன் எடுப்பதற்காக பூக்களில் அமரும் போது அயன் மகரந்த சேர்க்கை நடைபெற்று பூக்கள் காய்களாக மாறுகின்றன. தேனீக்கள் தொடர்ந்து இப்பணியை செய்து வவதால் மரம் மற்றும் செடிகள் உருவாக காரணமான காய்கள் பூக்களில் இருந்து உருவாகின்றன. பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு தேனீக்கள் மிக அவசியமாக கருதப்படுகிறது.தேனீக்கள் அழிந்து போனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நின்று போய், பூக்கள் காய்களாக மாறிட முடியாமல், விதைகள் உருவாகாமல் செடிகள் மலட்டுத்தன்மை அடைந்து விடும். அத்தோடு இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் நண்பனாக பார்க்க வேண்டிய தேனீக்களை, விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அழித்து வருகின்றனர்.இந்த நிலையே நீடித்தால் தேனீக்களின் இனம் அழிக்கப்பட்டு, பூக்கள் காய்க்க முடியாமலும், தனது சந்ததிகளை மீண்டும் உருவாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தேனீக்களில் 4 வகைகள் உள்ளன. அவை மலை தேனீ, கொம்பு தேனீ, பாறை தேனீ மற்றும் சிறிய அளவிலான கொசு தேனீக்கள் போன்றவை ஆகும். அனைத்து தேனீக்களின் தேனும் பயனுள்ளவை என்றாலும், சிறிய அளவிலான கொசுத் தேனீக்கள் சேகரிக்கும் தேன் வகை மிகுந்த சுவையானதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனீக்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் அதிகளவு இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. அதற்கு காரணம் விவசாயிகள் வீரிய மிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதே என தெரிய வந்துள்ளது.தேனீக்கள் மற்றும் மண் புழு போன்ற விவசாயத்திற்கு சாதகமான உயிரினங்கள் இறப்பை தடுக்க விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதுடன் விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பில் கூட ஈடுபடலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : activists ,
× RELATED சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு...