தொடர்ந்து 3 வாரமாக கொப்பரை தேங்காய் விலை இறங்கு முகம் க.பரமத்தி பகுதி விவசாயிகள் கவலை

க.பரமத்தி, செப். 11: கொப்பரை தேங்காய் விலை கடந்த மூன்று வாரங்களாக இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று முன்தினம் கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 824 மூட்டைகளில் 36691 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.93, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.98க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.2 குறைந்து ஏலம் போனது. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 7937 கிலோ எடையுள்ள 24915 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.21, அதிக விலையாக ரூ.26க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வார விலையில்மாற்றம் இல்லை.

Tags :
× RELATED பொங்கலுக்கு பிறகும் குறையாத காய்கறி...