குடியிருக்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவதா? நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கரூர், செப்.11: குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியதால் பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவடியான் கோயில் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருவதோடு சலவை தொழில், மீன்பிடித்தொழில் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு அமராவதி ஆற்றில் வெள்ளம் வந்த போது, பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த அதிகாரிகள், இந்த இடத்தில், குடியிருக்கும் அனைவருக்கும் நகராட்சியினர் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இந்த பகுதியினர் பட்டா கேட்டு முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நகராட்சி சார்பில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதிலும் குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரூர் நகராட்சி அலுவலகம் வந்து, கமிஷன் கார் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பல ஆண்டுகளாக சொத்து வரி உட்பட பல்வேறு வரிகளை கட்டி வருகிறோம். ஆனால் பட்டா கேட்டும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் காலி செய்ய சொன்னால் வேறு எங்கு செல்வது என பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், டவுன் போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்தி பரபரப்பு நிலவியது.

Tags : residence ,
× RELATED குடியிருப்புகளை காலி செய்யாமல்...