×

108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்

வேளச்சேரி: திருச்சி மாவட்டம், பாத்திமா மாலை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (28). இவர், குரோம்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே வாகனத்தில் உதவியாளராக குரோம்பேட்டை, புதிய காலனி 18வது குறுக்கு தெருவை சேர்ந்த கோமதி (24) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல அடையாறு சர்தார் பட்டேல் சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அடையாறு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி   கவிழ்ந்தது. இதில் டிரைவர் சங்கர், உதவியாளர் கோமதி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு   உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் உதவி:   ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான நேரம் அதிகாலை 3.30 மணி என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப சிரமப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக தமிழக குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் காரில் வந்துள்ளனர். பின்னர் விபத்து நடந்ததை அறிந்த அமைச்சர்கள் உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு படுகாயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : assistant ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை